|Tuesday, April 25, 2017

355 சட்ட திருத்த மசோதா: பிரதமரின் முடிவு என்ன? 

கோலாலம்பூர், மார்ச் 21: பாஸ் கட்சி பரிந்துரை செய்துள்ள 355 சட்ட திருத்த மசோதா அல்லது 1965ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற சட்ட (குற்றவியல் அதிகாரம்) திருத்த மசோதா குறித்து தேசிய முன்னணியிலுள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இவ்வாரம் விளக்கம் அளிக்கவுள்ளார்.

பிரதமரின் இந்த விளக்கத்திற்காக மஇகா காத்துக் கொண்டிருப்பதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அந்த கூட்டத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அதன் பின்னரே இந்த சட்ட திருத்த மசோதா குறித்து என்ன பரிந்துரைகளைச் செய்யலாம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்பதோடு, எங்களின் நிலைபாடும் தெரிய வரும் என்று அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ அப்துல் ஹடி அவாங் பரிந்துரை செய்துள்ள இந்த சட்ட திருத்த மசோதாவை அரசாங்கம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ளது குறித்து மஇகாவுக்கு எதுவும் தெரியாது என்றார்.

அதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எங்களை சந்தித்தபோது, அந்த சட்ட திருத்த மசோதா குறித்து நாங்கள் எங்களின் கருத்துகளைத் தெரிவித்து விட்டோம் என்றார்.

மஇகாவின் நிலையை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நன்றாகப் புரிந்துக் கொண்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.

பாஸ் கட்சி பரிந்துரை செய்துள்ள 355 சட்ட திருத்த மசோதா அல்லது 1965ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற சட்ட (குற்றவியல் அதிகாரம்) திருத்த மசோதாவை அரசாங்கமே தாக்கல் செய்யும் என்று கடந்த வாரம் துணைப் பிரதமர் கூறியிருந்தார்.

புதிய நண்பர் ஒருவர் கிடைத்துள்ளதால், அரசாங்கம் சில நண்பர்களை இழக்கவும் தயாராக உள்ளதாகவும் துணைப் பிரதமர் கூறியிருந்தார்.

துணைப் பிரதமர் அவ்வாறு கூறியிருப்பது தேசிய முன்னணியில் பிளவை ஏற்படுத்துமா என்பது குறித்து சுப்பிரமணியம் விளக்கவில்லை.

இதனிடையே, பாஸ் கட்சி பரிந்துரை செய்துள்ள 355 சட்ட திருத்த மசோதா அல்லது 1965ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற சட்ட (குற்றவியல் அதிகாரம்) திருத்த மசோதா குறித்து மசீச பொறுத்திருந்து பார்க்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து தேசிய முன்னணியிலுள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளிடம் கலந்து பேசாமல் மசீச தேசிய முன்னணியிடம் போர் கொடுக்காது என்று அவர் சொன்னார்.

அந்த சட்ட திருத்த மசோதா நமக்கு பாதகமாக உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்வற்கு அதன் எழுத்துப்படிவத்தை முதலில் பார்ப்பது நல்ல என்று அவர் சொன்னார்.

அனைத்து கட்சிகளிலும் கலந்து பேசாமல் அதுகுறித்து சண்டையிட முடியாது. எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனாகவே இருக்கும். அந்த சட்ட திருத்த மசோதா அளவுக்கு மீறியதாக உள்ளது என்றும் நாம் ஒருபோதும் கருதிவிட முடியாது என்றார்.–தி மலேசியன் டைம்ஸ்