|Monday, March 27, 2017

வான் கடல் பாதுகாப்பு படைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் களமாகிறது லீமா கண்காட்சி 

LIMA-2017-1

லங்காவி, மார்ச் 20: 2017 ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக வான் கடல் போக்குவரத்து கண்காட்சி – லீமா, நாளை கோலாகலமாக தொடக்கம் காணவிருக்கிறது. இம்மாதம் 25 ஆம் தேதி வரையில் லங்காவியில் நடைபெறவிருக்கும் இக்கண்காட்சி மில்லியன் கணக்கானோரைக் கவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

1991 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த லீமா கண்காட்சி நடத்தப்பட்டது. மலேசியாவின் வட்டார நட்பு நாடுகள் என 30 க்கும் அதிகமான நாடுகள் அக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. இவ்வாண்டு சுமார் 36 நாடுகள் அவற்றின் பங்கேற்பை உறுதிபடுத்தியுள்ளன.

அவற்றுள், ஆஸ்திரேலியா, பிரேசில், புருணை, ஹோங் கோங், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, யுக்ரேன் உட்பட 10 நாடுகள் லீமாவில் முதல் முறையாக பங்கேற்கவிருக்கின்றன. லீமாவில் பங்கேற்கும் நாடுகளின் வான் கடல் பாதுகாப்பு படைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் களமாக இது அமைகிறது.

லீமா கண்காட்சியில் சிங்கப்பூர் இரண்டாவது போக்குவரத்து அமைச்சர் எங் சீ மேங் அந்நாட்டின் இரண்டாவது தற்காப்பு அமைச்சர் ஓங் யே கூங் இருவரும் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர். அவ்விரு தலைவர்களும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ராசாக்குடனும் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி-யுடனும் சந்திப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்துலக வான் கடல் போக்குவரத்து தொழில் துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை மலேசியா விரைவில் அடையும் என்பதற்கு லீமா கண்காட்சி ஒரு சிறந்த தூண்டுகோலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அம்சங்களையும் பரிமாணங்களையும் உள்ளடக்கியிருக்கும் லீமா கண்காட்சி நிச்சயம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.

1991 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை லீமா கண்காட்சி பல மாதிரியான பயணங்களைச் சந்தித்துள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கூறினார். லீமா கண்காட்சியின் வாயிலாக பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2030 ஆம் ஆண்டு மலேசிய விண்வெளி தொழில் துறை உருமாற்றத் திட்டத்தின் வழி அத்தொழில் துறையில் மேம்பாடு அடைந்த நாடாக உருவாகும் இலக்கை மலேசியா எட்ட, லீமா கண்காட்சி முக்கியப் பங்காற்றும் என்பது உறுதி. அவ்விலக்கை அடைய மலேசியா தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் மேம்பாடு அடைந்த நாடாக மலேசியா உருமாறினால், நிச்சயம் இது சாத்தியமாகும்.

ஆசியானிலேயே மிகப் பெரிய வான் படையை சிங்கப்பூர் கொண்டிருக்கிறது. அந்நாட்டிடம் உயர் தரம் வாய்ந்த விமானங்கள் உள்ள வேளையில், நம் நாடு அவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத் துறையில் ஆளுமைத் திறன் கொண்டிருக்கிறது. இவ்வாண்டுக்கான லீமா கண்காட்சியில் பங்கேற்கும் தரப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உள்நாட்டைச் சேர்ந்தவர் ஆவர்.

உள்நாட்டு மக்கள் மின்னியல், விமானக் கட்டுப்பாடு, உயர் தொழில்நுட்பம் போன்ற தொழில்துறைகளில் ஈடுபட தொடங்கியிருப்பதால், இதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லீமா கண்காட்சியை விட இவ்வாண்டுக்கான லீமா கண்காட்சி மிகப் பெரிய அளவிலான மேம்பாட்டை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.

மலேசியா, ராணுவம் தொடர்பில் உயர் தொழில்நுட்பங்களை ஆளுதல் வேண்டும். இது போருக்குத் தயாராகும் யுத்தியாகக் கருதப்படாமல், பின்தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும்.–தி மலேசியன் டைம்ஸ்