|Friday, March 31, 2017

வட கொரியர் கொலை – தீவிர விசாரணைக்கு உதவ இந்தோனேசியா தயார் 

zahidhamidicitizen1606

கோலாலம்பூர், பிப்ரவரி 17: இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த திங்களன்று கொலையுண்ட வட கொரிய ஆடவர் அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் – னின் ஒன்று விட்ட மூத்த சகோதரர் என்பதை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கிம் சோல் என்ற பெயரைத் தாங்கிய கடப்பிதழை வைத்திருந்த நபரும் ஜோங் நாம் – உம் ஒருவரே ஆடவர் என துணைப்பிரதமருமான அவர் குறிப்பிட்டார். ஜோங் நாம் இரு வெவ்வேறு அடையாளங்களை வைத்திருந்தார். ஆள் மாறாட்டத்துக்காக அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அந்த ஆவணங்கள் உண்மையானவை என்றும் சாயிட் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கிம் ஜோங் நாம் – இன் சடலத்தை கோருவதற்காக வட கொரியாவிடமிருந்து பெறப்படும் எந்தவொரு கோரிக்கைக்கும், மலேசிய அரசாங்கம் ஒத்துழைக்குமென்றும் துணைப்பிரதமர் தெரிவித்தார்.

ஜோங் நாம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டாவது பெண் இந்தோனீசிய கடப்பிதழை வைத்திருந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பக்கார் உறுதிப்படுத்தினார். சித்தி அய்ஷா என்ற அப்பெண், 1992 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் தேதி செராங் எனுமிடத்தில், பிறந்தவராவார்.

இரண்டாவது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த மறைக்காணிகளின் பதிவின் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டதையும் போலீஸ் உறுதிப்படுத்தியது.

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட அப்பெண்மணி விவகாரத்தில் மலேசிய அமலாக்கத் தரப்புக்கு முழு ஒத்துழைப்பு நல்க இந்தோனேசிய போலீஸ் உறுதிகூறியுள்ளது.

மற்றுமொரு நிலவரத்தில், இரண்டாவது குவாலலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் உதவி போலிஸ்காரர்கள் அமர்த்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தவிர, அமலாக்க அதிகாரிகளின் பணிகள், சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த அங்கு நவீனமுறையிலான, தொழில்நுட்ப வசதிகளும் தேவைப்படுவதாக போலிஸ் படையின் நிர்வாக துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ சுல்கிப்ளீ அப்துல்லா தெரிவித்தார்.–தி மலேசியன் டைம்ஸ்