|Wednesday, May 24, 2017

பாஸ் கட்சியின் 355ஆவது சட்டத்திருத்த மசோதா: நீடிக்கும் சர்ச்சை – எதிர்ப்பு 

கோலாலம்பூர், பிப்ரவரி 17: நாளை தலைநகரில் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் 355ஆவது சட்டத்திருத்த மசோதா மீதான விளக்க பேரணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் இதன் தொடர்பான சர்ச்சைகல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பாஸ் கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 355ஆவது சட்டத்திருத்த மசோதா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதோடு, அது நாட்டின் அரசாட்சிக்கும் புறம்பானதாகும் என்று மலாய் ஆலோசக மன்றத்தின் ஆலோசனை வாரியத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹ்மான் கூறினார்.

பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் முன்வைத்துள்ள இந்த சட்டத்திருத்த மசோதா நாட்டின் அரச ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு முரணானது என்றும் அவர் சொன்னார்.

ஷாரியா நீதிமன்றத்தின் குற்றவியல் அதிகாரத்திற்கு அதிப்பட்சத் தண்டனையைக் கொண்டு வரும் இந்த சட்டத் திருத்த மசோதா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானதாகும் என்றார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவை அவர் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கக் கூடாது. காரணம் இஸ்லாம் சமயத்தை உட்பட்ட இவ்விவகாரம் அங்கு விவாதிப்பதற்கு ஏற்ற இடமல்ல என்றார்.

உண்மையிலேயே பாஸ் கட்சி இவ்விவகாரத்தை முன்னதாக சுல்தான்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்க வேண்டும். காரணம் இஸ்லாமிய விவகாரங்கள் அனைத்தும் சுல்தான்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார்.

1965ஆம் ஆண்டு ஷாரியா நீதிமன்ற சட்டத்தில் (குற்றவியல் அதிகாரம்) திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே கடந்த 24.11.2016ஆம் தேதி பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங், 355 சட்டத்திருத்த மசோதாவை தனிநபராக மக்களவையில் தாக்கல் செய்தார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் இடம் பெற்றுள்ள நாடாளுமன்றத்தில் எப்படி இஸ்லாமிய விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஷாரியா நீதிமன்றத்தில் விதிக்கப்படும் அதிகப்பட்ச தண்டனை இஸ்லாமிய விவகாரத்தை, நிபுணத்துவம் வாய்ந்தவர்களே அதன் நெறிவு சுளிவு குறித்து ஆராய வேண்டும் என்றார்.

355 சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய தண்டனை அல்-குர்ஆன், சுன்னாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று ஒரு வழக்கறிஞருமான அவர் சொன்னார்.

நோன்பு இருக்காதவர்களுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை, கள்ள உறவுக்கு 100 பிரம்படி மற்றும் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் ஆகியவற்றை விதிப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய சட்டமும் அவ்வாறு சொல்லவில்லை என்றார்.–தி மலேசியன் டைம்ஸ்