Penang undersea tunnel: PCM files report on possible fraud
July 17, 2017
Siasatan dalaman FGV akan bermula 24 Julai – Sulaiman Mahbob
July 17, 2017

பாஸ் கட்சியின் ஆதரவு இன்றி ………

கோலாலம்பூர், ஜூலை 17: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு இன்றி நம்பிக்கை கூட்டணியால் ஒருபோதும் அரசாங்கத்தை பிடிக்க முடியாது என்று தொடர்பு, பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் கூறினார்.

கடந்த 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின்போது பி.கே.ஆர் கட்சியும், ஜசெகவும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதற்கு பாஸ் கட்சியே முக்கிய காரணம்.

ஆனால், இப்போது நம்பிக்கை கூட்டணியில் பாஸ் கட்சி இல்லை. எனவே, பி.கே.ஆர் மற்றும் ஜசெக கட்சிகள் கடந்த காலங்களைப்போல் அதிகமான இடங்களில் வெற்றி பெற முடியாது. பாஸ் கட்சியின் ஆதரவு இன்றி அவ்விரண்டு கட்சிகளுக்கும் போதிய ஆதரவும் கிடைக்காது என்றார்.

‘நினைத்துப் பாருங்கள். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது கிடைத்த 70 விழுக்காடு பாஸ் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் இம்முறை நம்பிக்கை கூட்டணிக்கு கிடைக்காது. எனவே, இம்முறை பல தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி தோல்வி அடையப் போவது உறுதி என்று அவர் தமது அகப்பக்கத்தில் கூறினார்.

பி.கே.ஆர். மற்றும் அமானா நெகாரா கட்சிகளால் மலாய்க்காரர்களின் ஆதரவையும், வாக்குகளையும் திரட்ட முடியாது. காரணம் அவ்விரண்டு கட்சிகளும் உறுதியான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்ற அவர், மக்களுடனான ஆதரவையும் அவ்விரண்டு கட்சிகளும் பெற்றிருக்கவில்லை என்றார்.

இந்நிலையில் புதிய தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள நம்பிக்கை கூட்டணி மக்களின் ஆதரவைப் பெறுவதில் நிச்சயம் தோல்வியே அடையும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியுடன் துணையோடு ஜசெக 28 இடங்களைப் பிடித்த வேளையில், பி.கே.ஆர் 31 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் துணையோடு ஜசெக 38 தொகுதிகளிலும், பி.கே.ஆர். 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இதற்கு முன்பு ஜசெக தனியாக போட்டியிட்ட போது குறைந்த அளவிலான இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 1969ஆம் ஆண்டில் 13 இடங்களிலும், 1974ஆம் ஆண்டில் 9 இடங்களிலும், 1978ஆம் ஆண்டில் 16 இடங்களிலும், 1982ஆம் ஆண்டில் 9 இடங்களிலும், 1986ஆம் ஆண்டில் 24 இடங்களிலும், 1990ஆம் ஆண்டில் 20 இடங்களிலும், 1995ஆம் ஆண்டில் 9 இடங்களில் மட்டுமே ஜசெக வெற்றி பெற்றதை சாலே சுட்டிக் காட்டினார். 

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் ஒரு கோடியே 32 லட்சத்து 68 ஆயிரத்து 2 வாக்காளர்கள் வாக்களித்தனர் (84.84 விழுக்காடு). அதில் தேசிய முன்னணி 52 லட்சத்து 37 ஆயிரத்து 699 வாக்குகளையும், ஜசெக 16 லட்சத்து 36 ஆயிரத்து 267 வாக்குகளையும், பாஸ் கட்சி 16 லட்சத்து 33 ஆயிரத்து 389 வாக்குகளையும் எஞ்சிய வாக்குகள் இதர கட்சிகளும் பெற்றன என்றார்.

இதிலிருந்து எதிர்க்கட்சி கூட்டணிக்கு பாஸ் கட்சி பெரிய தூணாகவும், தேசிய முன்னணிக்கு அம்னோவும் பெரிய தூணாகவும் இருந்து வந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்போது நம்பிக்கை கூட்டணிக்கு ஜசெக பெரிய தூண் என்பதும் உண்மை என்றார்.   –தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.