|Wednesday, March 29, 2017

நீதிமன்றத்தின் முடிவால் ‘அதிர்ந்தது’ மஇகா ! 

MIC-ROS2-685x320

கோலாலம்பூர், ஜனவரி 11: மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலை கவிழ்ப்பதற்கு ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக டத்தோஸ்ரீ பழனிவேல் ஆதரவாளர்கள் தொடுத்த வழக்கில் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் உட்பட எழுவருக்கு எதிரான வழக்கு முழு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மஇகா மீண்டும் அதிர்ந்துப் போயுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இம்முடிவால் அக்கட்சியின் நடப்புத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களும் நெருக்கடியான சூழ்நிலையில் கதிகலங்கி நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது.

டத்தோஸ்ரீ டாக்டர் தலைமைத்துவதை புறக்கணிக்கும் நோக்கத்திலேயே டத்தோஸ்ரீ பழனிவேலின் ஆதரவாளர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கைத் தொடர்ந்து வந்துள்ளதாக மஇகாவின் வியூக இயக்குநர் கே.ராமலிங்கம் கூறினார்.

‘இவ்வழக்கில் பொய்யும், புரட்டும் செய்யப்பட்டுள்ளதை மேல்முறையீட்டு நீதிமன்றமே உணர்ந்துள்ளது. சங்கங்களின் பதிவு இலாகாவின் பின்னால் எதையும் துணிச்சலுடன் மறைக்க முடியாது என்பதற்கு டாக்டர் சுப்பிரமணியத்திற்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும் இது’ என்று நேற்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ராமலிங்கம் தெரிவித்தார்.

டாக்டர் சுப்பிரமணியத்திடம் போய் சேர்ந்து விடலாம் என சிலர் முடிவு செய்தாலும், டத்தோஸ்ரீ பழனிவேலின் ஆதரவாளர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என அர்த்தமாகாது என்றார்.
பலர் டாக்டர் சுப்ரா

தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் சேர்ந்துள்ளதற்கு சுப்ராவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, அவர்கள் மஇகா மீது பற்று வைத்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

டாக்டர் சுப்பிரமணியத்தை மஇகா தலைமையத்திலிருந்து விரட்டி அடிப்பதில் நாங்கள் வெற்றி கண்டால், அங்கு சென்றவர்கள் மீண்டும் எங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன் என்றார்.

விரைவில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பே இவ்வழக்கிற்கு ஒரு தீர்வு காணப்பட்டு விடும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளளோம். காரணம் டாக்டர் சுப்பிரமணியம் தொடர்ந்து மஇகாவுக்கு தலைமையேற்றால், அது தேசிய முன்னணி அமோக வெற்றி பெறுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எனவே, வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்குள் இவழக்கு முடிவதே நல்லது. இவ்வழக்கின் விசாரணை அதற்குள் முடிவடைந்து விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலை கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மீது மஇகாவின் வியூக இயக்குநர் கே.ராமலிங்கம் உட்பட எழுவர் வழக்குத் தொடுத்திருந்தனர்.

கே. ராமலிங்கத்தோடு வி.கணேஷ், டத்தோ ஹென்றி பெனடிக், எம். சத்தியமூர்த்தி, ஜார்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம், டத்தோ வி.எம்.ராஜூ ஆகியோர் இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.

மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா தேசிய உதவித் தலைவர்களான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், மஇகா தலைமைச் செயலாளர் ஏ. சக்திவேல், வழக்கறிஞர் ஏ. வசந்தி, ஆர்.ஓ.எஸ். தலைமை இயக்குநர் முகமட் ராஸின் அப்துல்லா,ஆர்.ஓ.எஸ். விசாரணை அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோரைப் பிரதிவாதிகளாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பழனிவேல் ஆதரவாளர்கள் தொடுத்த இவ்வழக்கை தள்ளுபடி செய்வதில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உட்பட எழுவர் கடந்த 11.7.2016ஆம் தேதி வெற்றி பெற்றனர்.

தமது அறையில் இரு தரப்பின் வாதத் தொகுப்புகளை செவிமெடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி யியோ வீ சியாம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஆனால், நேற்று முன்தினம் இவ்வழக்கை செவிமெடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து இவ்வழக்கின் விசாரணை புதியதொரு நீதிபதியின் முன்னிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற வேண்டு என்றும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.–தி மலேசியன் டைம்ஸ்