|Friday, May 26, 2017

நாளை சட்டசபை கூட்டம்: எடப்பாடி அரசு தப்பிக்குமா? அல்லது மீண்டும் ஓ.பி.எஸ்? 

சென்னை, பிப்ரவரி 17 :  முதல்வர்  எடப்பாடி   பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு, பெரும்பான்மையை ஆதரவு உள்ளதா என்பதை நிருபிக்க, நாளை, 18ம் தேதி, சட்டசபை கூடுகிறது.

முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து, அந்தப் பதவியை பிடிக்க முற்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் சிறை சென்றார்.

இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி  பழனிச்சாமி, நேற்று முதல்வராக பதவியேற்றார். அவர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Image result for ops panneerselvam,edappadi palanisamy

கூவத்தூரில் சிறை வைத்துள்ள, எம்.எல்.ஏ.,க்களை, அதிக நாட்கள் தங்கள் பிடியில் வைத்திருக்க முடியாது என்பதால், உடனடியாக சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்பாடு செய்வது என, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, சட்டசபை கூட்டம் நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை, 11:00 மணிக்கு, சட்டசபை கூடுகிறது; அதில், புதிய அமைச்சரவை மீது, நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் நேற்று அறிவித்தார்.

சட்டசபையில், ஒரு காலியிடம் தவிர, அ.தி.மு.க.,விற்கு, 135; தி.மு.க.,விற்கு, 89; காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று என, மொத்தம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களில், பன்னீர்செல்வம் உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்கள், தனி அணியாக உள்ளனர். மீதம், 124 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதரவு அளித்தால் மட்டுமே,  எடப்பாடி   பழனிச்சாமி ஆட்சி நிலைக்கும்.

இன் நிலையில்   அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி உட்பட 7 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ். அணி அறிவித்துள்ளது. சசிகலா ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 7 பேர் உட்பட 13 அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ். அணி அவைத் தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார்.

அதன்படி சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் மு.தம்பிதுரையையும் நீக்கி மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதேபோல் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோரையும் நீக்கி அவைத் தலைவர் மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.

Image result for ops panneerselvam,edappadi palanisamy

மேலும் அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், அமைப்பு செயலாளர்கள் தங்கமணி, தளவாய் சுந்தரம், அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சி.வி.சண்முகம், மற்றும் எம்.பி நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து 13 பேர் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கம் செய்து ஓ.பி.எஸ். அணி அதிரடி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தலைமை செயலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினா். ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன், செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணி சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தேர்வு முறையை ரகசியமாக நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கையை வலிறுத்தி மனு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் அணி, சபாநாயகர் தனபாலிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரை சந்தித்து பேசிய பின் செய்தியாளரிடம் பேசிய பாண்டியராஜன், நாளை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். –தி மலேசியன் டைம்ஸ்