|Monday, April 24, 2017

தொடங்கியது லீமா 2017 

லங்காவி, மார்ச் 21: 2017 ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக வான் கடல் போக்குவரத்து கண்காட்சி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. லங்காவியில் அதன் தொடக்க நிகழ்வில் இன்று காலை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் சாயிட் ஹமிடி என பல முக்கியத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இம்மாதம் 25 ஆம் தேதி வரையில் நடைபெறும் இக்கண்காட்சி நாட்டின் வான் மற்றும் கடல் போக்குவரத்து துறையின் ஆற்றலை வெளிப்படுத்தும் களமாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவத்தை மேம்படுத்தி அதன் கருவிகளை தரம் உயர்த்துவதற்கு நீண்ட கால அடிப்படையிலான திட்டத்தை மலேசியா மேற்கொண்டிருப்பதால் தற்காப்பு அம்சங்களின் மீது இந்நாடு தொடர்ந்து முக்கியத்துவம் செலுத்தும் என லீமாவை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்தார்.

தற்காப்பு, பொது ஒழுங்கு மற்றும் அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகளை வலுப்படுத்த 11ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 26 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் லீமா கண்காட்சியில் இவ்வாண்டு 36 நாடுகளைச் சேர்ந்த 555 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கடந்தாண்டில் பதிவான 512 நிறுவனங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஸ்ஸாமுடின் ஹுஸ்ஸேன் கூறினார்.

இனி வரும் காலங்களில் லீமா கண்காட்சியில் இளையோரின் பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 2050 தேசிய உருமாற்ற கொள்கைக்கு ஏற்ப நாட்டின் போக்குவரத்து மற்றும் தற்காப்பு துறைகளின் வளர்ச்சிக்கு இளையோர் முக்கியப் பங்காற்றுவதை உறுதிபடுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டுக்கான லீமா கண்காட்சியை முன்னிட்டு சுமார் 500 இளையோரை உட்படுத்திய தற்காப்பு மற்றும் போக்குவரத்து துறைகளை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்து ஆராயவும் திட்டமிடவும் ஆய்வரங்கு நடத்தப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

2017 ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக வான் கடல் போக்குவரத்து கண்காட்சியின் வாயிலாக, உள்நாட்டு வான் மற்றும் கடல் போக்குவரத்து சார்ந்த தொழில் துறைகள் அனைத்துலக ரீதியிலான பெரிய வர்த்தகத் துறையில் நேரடியாக ஈடுபடுவதை உறுதிபடுத்த இயலும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோவ் தியோங் லாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.–தி மலேசியன் டைம்ஸ்