Adenan meninggal dunia pada usia 72
January 11, 2017
M’sia kehilangan pemimpin berwibawa – Najib
January 11, 2017

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு

சென்னை, ஜனவரி 11: தமிழர்களின் உணர்வுடனும் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்திருக்கும் பொங்கல் திருநாள் மீண்டும் “கட்டாய விடுமுறை” பட்டியலில் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொங்கல் திருநாள் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட வேண்டிய தருணத்தில் குழப்பத்தை உருவாக்கிய மத்திய அரசின் போக்கை அவர் கடிந்தார். தமிழ் உணர்வுகளை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் திருநாளை “கட்டாய விடுமுறை” பட்டியலில் மத்திய அரசு இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் “மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு” அளித்த பரிந்துரையை அப்படியே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட்டது தமிழர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு சமமானது என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

முன்னதாக, பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை நாள் பட்டியலிலும் திருவள்ளுவர் தினத்தை விருப்ப விடுமுறை பட்டியலிலும் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை முன்வைத்தார். தமிழக அரசு, ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை தமிழ் மாதமான தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய அரசு காலண்டரில் விருப்ப விடுமுறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் 14 நாட்கள் விருப்ப விடுமுறையாக 12 நாட்கள் இடம் பெற்றுள்ளன. விருப்ப விடுமுறை பட்டியலில் மூன்று நாட்களை கட்டாய விடுமுறை நாட்களாக மாநில ஊழியர் நல ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்து அறிவிக்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்கப்படாமல் விருப்ப விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

இதனால், மத்திய அரசு ஊழியர்கள் பொங்கல் அன்று விடுப்பு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும். அதே போல் திருவள்ளுவர் தினத்தை விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என பன்னீர் செல்வம் சிறப்புக் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் மற்றும் சிறப்பு போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு பயணிகள் செல்ல சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ் சேவை இயக்கம் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிறப்பு பேருந்துகள் புதன்கிழமை முதல் 13-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 15, 16, 17 ஆகிய நாட்களிலும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகள் செல்ல வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களில் செல்லக் கூடியவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

பொங்கல் சிறப்பு பஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லக்கூடிய 2,275 பஸ்களும் கூடுதலாக 794 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காலை 10 மணி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.

பொங்கல் கொண்டாடுபவர்கள் பெரும்பாலும் கடைசி நேர பயணத்தையே மேற்கொள்வார்கள். அதனால் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை 1779 சிறப்பு பஸ்களும் நாளை மறுநாள் 1872 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.