|Wednesday, March 29, 2017

ஜல்லிக்கட்டுக்கு வலுக்கும் ஆதரவு 

0001274a_medium

சென்னை, ஜனவரி 11: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மிருகங்களை வதை செய்வதாக கூறி இந்தப் போட்டியை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த அனுமதிக் குமாறு ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நடிகர் கமல்ஹாசனும் மிருகங்களைக் காக்க வேண்டுமெனில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு, பிரியாணிக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பினார். மேலும் தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வெளியாக வில்லை. தீர்ப்பு வெளியானதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நிலைப்பாட்டை எடுக்கும். தீர்ப்புக்காக மட்டுமே தற்போது மத்திய அரசு காத்துக் கொண்டிருக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளையோ, அல்லது நாளை மறுநாளோ வெளியாகலாம். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்ச நீதிமன்றமும் நல்ல தீர்ப்பையே வழங்கும் என நம்புகிறோம் என அவர் சொன்னார். மிருகங்களை காட்சிப்படுத் தவும், பழக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்ட தடைப் பட்டியலில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காளைகளையும் சேர்த்து விட்டது. அதுதான் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு காரணம். அந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்திடம் தெளிவாக விளக்கி இருக்கிறோம். ஜல்லிக்கட்டு மிருகத்தை வதைக்கும் விளையாட்டு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மட்டுமே மத்திய அரசு அமைதி காத்து வருகிறது என அவர் கூறினார்.

கமல், சூர்யாவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனுஷ், சிவகார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகியோர் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. இப்போட்டிக்கு கமல், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனுஷ், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் குரலிலும் அடையாளத்தில் ஒருங்கிணைந்த அம்சம். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நமக்கு ஜல்லிக்கட்டு தேவை” என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான புகைப்படத்தை டுவிட்டர் தளத்தில் தங்களுடைய முகப்பு படமாக மாற்றியுள்ளார்கள்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ஜல்லிக்கட்டு விளையாட்டின் அடையாளமான உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் வாடிவாசல் முன் தமிழகம் முழுவதும் இருந்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், ‛செல்ஃபி’ எடுத்து செல்கின்றனர்.–தி மலேசியன் டைம்ஸ்