|Friday, March 31, 2017

சிலாங்கூரில் பாஸ் கட்சியின் நிலை என்ன? 

PAS-Selangor2

கோலாலம்பூர், பிப்ரவரி 16: வரும் ஏப்ரல் மாதம் கெடாவில் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் மாநாட்டின்போது சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சியின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் உதவித் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார்.

பி.கே.ஆர். கட்சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதா, இல்லையா என்பது உட்பட சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிப்புரிவதா இல்லையா என்பது குறித்தும் கட்சி முடிவு செய்யும் என்றார்.

சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து ஆட்சி செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய நிலையில் பாஸ் கட்சி உள்ளதாகவும் அவர் சொன்னார்.

பி.கே.ஆர்.கட்சியுடன் பாஸ் கட்சி தொடர்ந்து அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில் முடிவு செய்யப்படும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் கூறியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே முதலாம் தேதி வரை கெடா, அலோஸ்டாரில் பாஸ் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது.

இன் நிலையில் பாஸ் கட்சி மற்ற எதிர்க்கட்சிகளுடன் இனைந்து போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் அடிக்கடி எழுந்து வருகிறது.

பாஸ் கட்சி நம்பிக்கை கூட்டணியில் சேர மறுத்தால் , வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் தேசிய முன்னணியே அத்தேர்தலில் வெற்றி பெறும் என்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார்.

இந்நிலை ஏற்பட்டால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிப் போகும் என்பதோடு, அது தேசிய முன்னணி அல்லது அம்னோவின் வெற்றிக்கு பாஸ் கட்சி வழிவகுத்து விடும் என்று பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர் கூறியிருந்தார்.

எந்த கட்சியாவது மும்முனைப் போட்டிக்கு வழிவகுக்குமானால், அக்கட்சி தேசிய முன்னணி அல்லது அம்னோவை ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும் என்றார்.

நம்பிக்கை கூட்டணியில் சேருவதற்கு பாஸ் கட்சிக்கு ஒரு மாதம் காலக்கெடு கொடுத்துள்ளப் போதிலும், நம்பிக்கை கூட்டணியில் வந்து சேருமாறு பாஸ் கட்சியிடம் பெர்சத்து கட்சி ஒருபோதும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாகத் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாங்கள் பொறுமையாக இருந்து அக்கட்சிக்கு போதிய காலஅவகாசமும் கொடுத்து விட்டோம். தாம் ஒருபோதும் அக்கட்சியின் மன்றாடப் போவதில்லை, அவர்களின் கால்களை முத்தமிடவும போவதில்லை என்று டாக்டர் மகாதீர் சொன்னார்.

கடந்த 1.2.2017ஆம் தேதி பாஸ் கட்சியும், பெர்சத்து கட்சியும் தலைநகரில் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், அச்சந்திப்பின்போது எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒருவேளை, பாஸ் கட்சி பெர்சத்து கட்சிகளுடன் சேர விருப்பம் இல்லாமல் பெர்சத்து கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்க சம்மதித்தால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, பெர்சத்து கட்சி ஜசெகவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

காரணம் அக்கட்சி மக்களவையில் 36 இடங்களை வைத்துள்ளது. ஆனால், பாஸ் கட்சி 26 இடங்களை மட்டுமே கொண்டுள்ளது என்று டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். –தி மலேசியன் டைம்ஸ்