|Wednesday, May 24, 2017

சிலாங்கூரில் பதவி விலக மாட்டோம், பாஸ் கட்சி திட்டவட்டம் 

கோலாலம்பூர், மே 19: சிலாங்கூர் மாநில அமைப்புச் சட்டவிதிகளின்படி தாங்கள் மாநில அரசாங்கத்திலிருந்து ஒருபோதும் பதவி விலக போவதில்லை
என்று பாஸ் கட்சி நேற்று உறுதியுடன் கூறியது.

மாநில சுல்தான் அனுமதித்த காலம் வரை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி வகிக்கலாம் என்று 1959ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அமைப்புச் சட்டத்தின் பிரிவு 53 (7) கூறியுள்ளது. எனவே, அம்மாநில அரசாங்கத்தில் பதவி வகித்து வரும் 3 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தொடர்ந்து பதவியில் இருந்து வருவார்கள் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.

அம்மூவரும் மாநில சுல்தான் உத்தரவின்பேரில் மாநில ஆட்சிக்குழு பதவிக்கு நியமனம் செய்யப்பட்டனர். எனவே, அடுத்தக்கட்ட முடிவு வரும் வரை அவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள் என்று நேற்று பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமையயேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 13 பேரும் உடனடியாக பதவி விலகுமாறு பாஸ் கட்சி கடிதம் வெளியிட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

தாம் அதுபோன்ற கடிதம் எதனையும் வெளியிடவில்லை என்று இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட சிலாங்கூர் மாநில பாஸ் தலைவர் சலேஹேன் முகி கூறினார்.

இதனிடையே, பாஸ் கட்சியின் சார்பில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இருக்கும் அம்மூவரும் பதவி விலக வேண்டியதில்லை. காரணம் அவர்கள் அனைவரும் மாநில சுல்தானால் நியமனம் செய்யபப்பட்டவர்கள் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார்.

பி.கே.ஆர். கட்சியும் இதுவரை எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. வெளிநாட்டிலுள்ள மாநில மந்திரி பெசார் நாடு திரும்பும்வரை காத்திருப்போம் என்றார்.

டத்தோ இஸ்கண்டார் அப்துல் சமாட், டத்தோ டாக்டர் அகமட் யூனூஸ், ஸய்டி அப்துல் தாலிப் ஆகியோர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

பி.கே.ஆர். கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாக கடந்த 11.5.2017ஆம் தேதி பாஸ் கட்சியின் சமய மன்றம் முடிவு செய்தது. –தி மலேசியன் டைம்ஸ்