|Tuesday, March 28, 2017

சந்தையில் ஆபத்தை விளைவிக்கும் மின்சாரப் பொருட்கள் 

idris fomca

கோலாலம்பூர், பிப்ரவரி 16: சந்தையில் ஆபத்தை விளைவிக்கும் மின்னியல் மற்றும் மின்சாரப் பொருட்கள்  இருப்பது அதிர்ச்சியைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். இதே பிரச்னையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறது என்றாலும் இதற்கு சரியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

எரிசக்தி ஆணைக்குழு-சிரிம் (SIRIM) ஆகியவற்றின் லேபல் இல்லாமல் நிறைய பொருட்கள் சந்தையில் வெளிப்படையாகவே விற்பனையில் இருக்கின்றன.  எரிசக்தி ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்னியல் பொருட்களின் பட்டியலில் இல்லாத மின்னியல் பொருட்கள் சந்தையில் அதிகமாகவே இருப்பதாக இத்ரிஸ் கூறினார்.  

மின்சார மாற்றுக்கருவி, கணினிக்கு மின்விநியோகம் செய்யும் யூனிட்டுக்கள், மறு மின்னூட்டு செய்ய முடிந்த பாட்டரிகள் எல்லாம் எல்லாம் எரிசக்தி ஆணைக்குழுவின்  கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டிய மின்னியல் பொருட்கள்தாம்.  ஏனெனில் அவை 240 வோல்ட் மின்சக்தி கொண்டதால் வெடிப்பதற்கும் நெருப்பு பிடிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ள மின்பொருட்களாகும்.  

மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படு பொருட்களான மின்சார கேபல் போன்றவற்றிற்குக் கூட எரிசக்தி ஆணைக்குழு அல்லது சிரிம் அனுமதி முத்திரை கிடையாது.  மிகவும் மோசமான தரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மின்சார கேபல்கள் மலேசிய சந்தையில் நிறைந்துள்ளதாக மின்னியல் மற்றும் மின்சார சங்கம் எச்சரித்துள்ளது.  மிகவும் தரக்குறைவான மின்சார கேபல்கள் விரைவில் சூடாகி தீப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.  ஆகையால் எரிசக்தி ஆணையம் அல்லது அரசாங்க ஏஜன்சிகள் உறுதிச் சான்றிதழ் வழங்கிய குத்தகையாளர்களை மட்டுமே நியமிக்குமாறு வீட்டு உரிமையாளர்களை மின்னியல் மற்றும் மின்சார சங்கம் கேட்டுக்கொள்கிறது.  ஆனால் எத்தனை வீட்டு உரிமையாளர்கள் இந்த குத்தகையாளர்கள் யார் என்ற விபரத்தை தெரிந்து வைத்துள்ளனர்.  இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட குத்தகையாளர்களை தெரிந்து வைத்திருப்பதற்கான விபரப் பட்டியல் தெளிவாக பயனீட்டாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் இருந்தால் அவர்கள் தரமான குத்தகையாளர்களை இனங்கண்டுகொள்வது எளிதாக இருக்கும்.  

மலேசிய மின்னியல் சட்டம் 1994ன்படி, மின்னியல் சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு, வாங்குவதற்கு, விளம்பரம் செய்வதற்கு, உற்பத்தி செய்வதற்கு அனுமதிச் சான்றிதழ் தேவையாகும்.  எரிசக்தி ஆணையத்தின் அனுமதி இருந்தாலும் கூட, அந்த மின்பொருள் அது முறையாக இயங்குகிறதா என்பதனைக் கண்டுபிடிக்க சோதனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.  

சம்பந்தப்பட்ட மின்னியல் பொருள் சோதனையில் தோல்வியடைந்தால், அது கொண்டு வரப்பட்ட நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படும் அல்லது அப்புறப்படுத்தப்படும்.  அப்படிப் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பொருள் எரிசக்தி ஆணையம்-சிரிம் முத்திரை குத்தப்பட்டு நாட்டில் சந்தைப்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படும்.  

இப்படி இறுக்கமான விதிமுறைகள் இருந்தும் கூட, சந்தையில் இந்த முத்திரை இல்லாத பொருட்கள் விற்பனையில் அதிகமாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை.  இவ்வாறான ஆபத்தான மின்னியல் பொருட்கள் பயனீட்டாளர்களின் உடலை சேதத்திற்கு உள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல் உயிருக்கும் உலை வைத்து விடுகின்றன.  

2014ன் “கட்டுப்படுத்தப்பட்ட மின்னியல் பொருட்களில்” மின்னூக்கி மற்றும் எடாப்டர்களுக்கு ஆஎரிசக்தி ஆணையம்-சிரிம் பாதுகாப்பு முத்திரை இருக்கும்பொழுது மறுமின்னூட்ட பாட்டரிகள் மட்டும் ஏன் அந்தப் பட்டியலில் இல்லை என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.   

மலேசியாவில் கைப்பேசிகள் 20 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  மின்-சிகரெட்டுக்கள் 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கின்றன.  மின்வங்கிகள் (power bank) 5 வருடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.  இந்த சாதனங்கள் யாவுமே மறுமின்னூட்டம் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பாட்டரியின் மூலமாக இயங்கி வருகின்றன.  ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துலக வானூர்தித் துறை பயணிகள் பிரயாணம் செய்யும் விமானத்தில் இந்த வகை பாட்டரிகளைக் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.  இந்த வகை பாட்டரிகள் அதிக சூடாகி வெடிக்கக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும்.  

நம்முடைய வீடே நமக்கான பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.  ஆனால் 2014ல் மட்டும் 2,717 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.  இதில் 139 பேர் இறந்து போயினர்.  389 பேர் பல காயத்திற்கு உள்ளாயினர்.  இந்த தீப்பிடிப்பு சம்பவங்களில் 55 விழுக்காடு மின்சாரக் கோளாறுகளால் ஏற்பட்டவையாகும். இதில் மிகப் பெரிய காரணமாக இருப்பது மின்கம்பி இணைப்பு பிரச்னையேயாகும். 

மலேசியாவில் மின் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பேரிடர்கள் வருமாறு:-

•   8.5.2016ல் பத்திரிகையாளர் ஒருவரின் மகளின் திறன்பேசி செத்தியாவங்சாவில் உள்ள தன்னுடைய வீட்டில் மின்னூட்டப்படும்பொழுது வெடித்தது.  

•    19.4.2016ல் செராஸில் திறன்பேசியை மின்னூட்டிக்கொண்டே அதில் உரையாடிக் கொண்டிருந்த ஒரு 30 வயது மாது மின்சாரம் தாக்கி இறந்துபோனார்.

•    கெடாவைச் சேர்ந்த 28 வயதுக்காரர் ஒருவர் தன்னுடைய கைப்பேசியை மின்னூட்டிக்கொண்டிருக்கும்பொழுது அது ஒலிக்க ஆரம்பித்ததும் எடுத்துப் பேசியிருக்கிறார். அப்போது திறன்பேசி வெடித்து அவர் பலத்த காயத்திற்கு உள்ளானார்.

•    நவம்பர் 2015ல் மின்சிகரெட் பயன்படுத்திக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரின் மின்சிகரெட் வெடித்து  அவருடைய உதட்டில் 6 தையல்கள் போடப்பட்டன.

•  25.10.2015ல் மின் சிகரெட் சாதனம், கோத்தாபாருவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த மலிண்டோ விமானத்தில் நெருப்புப் பிடித்துக்கொண்டது.

•     ஆகஸ்டு 2014ல் மருந்தியல் நிபுணர் ஒருவர் செகாமாட், ஜோகூரில் உள்ள தன்னுடைய வீட்டில் ஷவரில் குளிக்கும்பொழுது மின்சாரம் தாக்கி இறந்துபோனார். 

இப்படியாக காயங்கள், இறப்பு, வெடிப்புக்கள், தீ, மின்தாக்குதல் என பல விதமான அபாயங்களை கோளாறான மின்சாதனங்கள் ஏற்படுத்துகின்றன.

ஆகையால் எரிசக்தி ஆணையமும் சிரிமும் தன்னுடைய வரையறையில் உள்ள மின்பொருட்களின் பட்டியலை இன்னும் விரிவுப்படுத்த வேண்டும்.  நிறைய மின்பொருட்கள்  இன்னும் எரிசக்தி ஆணையத்தின் கீழ் வராமல்தான் இருக்கின்றன.  

மிகவும் தரம் குறைந்த மின்னியல் சாதனங்கள், போலி எரிசக்தி ஆணையம்-சிரிம் முத்திரைகளைக் கொண்ட லேபல்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.  தி மலேசியன் டைம்ஸ்