|Sunday, May 28, 2017

எஸ்.பி.எம். முடித்த இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன? 

-தவமணி பெருமாள்-

நாட்டின் பொருளாதார மந்தநிலை, பொருள்களின் விலையேற்றம், பொருள் சேவை வரி, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய சவால்களுக்கு மத்தியில், கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வெழுதிய மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது பாராட்டுதலுக்குரியது. எனினும், இவர்களுக்கான சவால், இனிமேல் தான் ஆரம்பமாகப் போகிறது….

கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவின் ஆய்வைச் சற்று கூர்ந்து கவனிப்போமேயானால், தேர்வெழுதிய, 434, 535 மாணவர்களில், சுமார் 8, 647 மாணவர்கள் எல்லா பாடங்களிலும் A (A+, A, A-) பெற்றுள்ளனர். பொதுவாக, எல்லா மாணவர்களின் தேர்ச்சி நிலையும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு தேர்வெழுதியவர்களில் 340 ஆயிரம் 698 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வுச் சான்றிதழ் பெற தகுதி பெற்றுள்ளனர்.

அதில், 313 ஆயிரம் 667 பேர் கல்வி அமைச்சின் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்; எஞ்சியவர் தன்னிச்சையாக தேர்வெழுதியவர்களாவர்.

அப்படியென்றால், சான்றிதழ் பெற தகுதியில்லாத 93 ஆயிரத்து 837 பேரின் நிலை என்ன?

இந்நேரம் அவர்களில் சிலருக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கப் பெற்று ஏதாவதொரு தனியார் கல்லூரியில் பயிலலாம் என முடிவு பிறந்திருக்கும். மேலும் சிலருக்கு, மீண்டும் எஸ்பிஎம் தேர்வெழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறலாம் என்ற விடாமுயற்சி தூங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும்.

SPM

 

வாழ்க்கையே முடிந்து விட்டது

இன்னும் சிலர் இந்நேரம் தொழிற்சாலைகளே தங்களது கனவுகளின் இறுதி பயணம் என தீர்மானித்து அங்கு பணிபுரியத் தொடங்கியிருக்க வேண்டும். தங்களது எண்ணற்ற இலட்சியங்களைத், தேர்வில் தோற்றதால் கைவிட்டிருக்கும் இவர்களை எத்தனை பேர் தட்டிக் கொடுத்திருப்பீர்கள்? எஸ்பிஎம் தேர்வில் தோல்வி என்றால் வாழ்க்கையே முடிந்து விட்டது போல தோன்றும் அந்த பருவம் அறியா பிஞ்சுகளுக்கு உங்களில் எத்தனை பேர் ஆறுதலும் வழிகாட்டுதலும் வழங்கியிருப்பீர்கள்?..

நாட்டில், சவால்களும் போட்டியும் நிறைந்த இவ்வேளையில், எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பது, இந்திய சமுதாயம் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு விவகாரம் ஆகும். இந்தச் சாதனைக்கு பின்னால் பல தியாகங்களும் , வேதனைகளும் , விடா முயற்சியும் , கடும் உழைப்பும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

பல இழப்புகளுக்கு பின் கிடைத்த வரமே இந்தச் சிறந்த மதிப்பெண்களாகும். ஆனால், இதற்கு அங்கீகாரம் என்னவாக இருக்கும்? இத்தகைய மாணவர்களுக்கு அடுத்து அரசு தரப்பில் எத்தகைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? இவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

நிலை தான் என்ன?

இவர்கள், அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் விண்ணப்பித்திருப்பர். அதில் ஓரிருவருக்கு ( மருந்தகவியல், மருத்துவம், வழக்குறைஞர் ) ஆகிய துறைகளில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.

இந்திய மாணவர்கள் வெகு சிலருக்கே அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதுவும் பெரும்பாலானோருக்கு அவர்களுக்கு விருப்பமில்லா – ஏற்பில்லா துறைகளில் பயில வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற பிற மாணவர்களின் நிலை தான் என்ன? இதற்கு தீர்வு?

அடுத்து , மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நமது மாணவர்களுக்கான வாய்ப்பு எவ்வளவு பிரகாசமாக உள்ளது என்று பார்த்தால், பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் விழுக்காட்டைக் காட்டிலும் மிகக் குறைவு எனவே கூற வேண்டும்.

இங்கேயும் இதே பதில் என்றால், வேறு எங்கு செல்வது இந்த மாணவர்கள்? அடுத்த சிறந்த இந்திய தலைமுறை எந்த கல்விக்கூடத்தை அடிப்படையாகக் கொண்டு தனது கனவுகளை நிறைவேற்றுவது?

students_malaysia_pelajar_sekolah_school_high_afif_spm

சரி, சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் எப்படியாவது கரை சேர்ந்து விடுவர் என்று நம்புவோம். ஆனால், குறைந்த அல்லது மோசமான மதிப்பெண்களைப் பெற்றவர்களின் நிலை என்ன? படிப்பில் தேறவில்லை.

ஆக பொருள் ஈட்டட்டும் என அவர்களை அப்படியே விட்டு விடலாமா? அல்லது திறமை இல்லை, அதனால் வீட்டிலே இருக்கட்டும் என தணித்து வைத்து விடலாமா?

நாட்டில், எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் மீதே அனைத்து தரப்பினரின் பார்வையும் கவனமும் திரும்புகிறது. அவர்களுக்கு எது தேவை? அதை எவ்வாறு பெறுவது ? தனது கனவுகளை எப்படி நனவாக்கிக் கொள்வது என்பது அந்த மாணவருக்குத் தெரியும்.

நமது சமுதாயம்

உண்மையில் நமது சமுதாயம், கல்வியில் மோசமான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள் மீது தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை ஒவ்வோர் அரசாங்கத் தலைவரும், மக்கள் பிரதிநிதியும், அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்களும் கவனத்திற் கொண்டால், இந்தியர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

மேலும், உற்பத்தியாற்றல் கொண்ட மனித மூலதனத்தை உருவாக்க முடியும். மோசமான தேர்வு முடிவைப் பெற்ற மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வி இல்லாமல் போகலாம். ஆனால், அவர்களிடையே அளவுக்கதிகமான திறன்கள் புதைந்து கிடக்கும். அதைத் தட்டி எழுப்ப கூடிய வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நாட்டில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் குறைவாக இருக்கும் சமுதாயமாக தற்போது நாம் இருக்கிறோம். இத்தகைய மாணவர்களுக்கு வணிகம் தொடர்பான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் நாம் பொருளாதாரத்தில் பிற இனங்களுக்கு ஈடாக போட்டியிட முடியும்.

இந்திய இளைஞர்கள் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்ற தோற்றம் மாறி , இந்திய இளைஞர்கள் வெற்றிகரமாக வர்த்தகத்தில் பீடு நடை போட்டு வருகின்றனர் என்ற நிலை ஏற்பட வேண்டும்.

SPM-Results

குறைந்த மதிப்பெண்களைப்

அதற்கு இந்தக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை வலை வீசி தேடுங்கள்! தமிழ்ப்பள்ளிகளில் நாம் பயிலும் போது, “உனது எதிர்கால ஆசை என்ன?” என ஆசிரியர் கேட்டால், “ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், விமானி” எனக் கூறிய மாணவர்களின் குரல் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், குண்டர் கும்பல் தலைவன், போதைப் பொருள் விநியோகிப்பாளர் அல்லது போதைப் பித்தன் “ என எந்த மாணவனும் கூறியிருக்க மாட்டான். இருந்தும் இது இன்று நடந்து கொண்டு இருக்கிறதே! இதற்கு குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் , நல்ல நிலைக்கு வர மாட்டார்கள் என்று அவர்களை ஒதுக்கிய அல்லது அவர்களை கண்டுக் கொள்ளாமல் போன நமது சமுதாயம் இதற்கு ஒரு காரணம்.

கல்வியில் சிறந்த மதிப்பெண்களை ஒரு மாணவன் அடைய முடியாவிட்டால், அவனது பின்னணியை முதலில் ஆராய்ந்து அவனுக்குத் தேவையானவை என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். வறுமையான குடும்ப சூழல் அல்லது குடும்ப பிரச்சனைகள் அந்த மாணவனின் தேர்ச்சியைப் பாதித்திருக்கலாம்.

இந்நிலையில், அரசாங்கமும் இவர்களைக் கைவிடவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அரசாங்கம் IKBN எனப்படும் தொழில்திறன் கல்லூரி & ILN – எனப்படும் தேசிய தொழில்பயிற்சி கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது.

இன ரீதியிலாக

இங்கு இன ரீதியிலாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆக, தயவு செய்து இதுபோன்ற சாக்கு போக்குகளைக் கூறி கண்முன்னே படர்ந்து கிடக்கும் வாய்ப்புக்களைக் கைநழுவ விட்டுவிடாதீர்கள். இது போன்ற கல்லூரிகளில் தங்கும் விடுதி நிர்வாகம், வாகனங்களைப் பழுதுபார்த்தல், பல்லூடக படைப்பு, தகவல் தொழில்நுட்பம், சமையல் என பல துறைகளில் திறன் கல்வி வழங்கப்படுகிறது. இதனால் பிற்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பும் காத்திருக்கிறது.

ஆனால், தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவது குறித்து நாட்டில் எத்தனை இந்தியருக்குத் தெரியும்? இந்த அரசாங்கத் திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்றடைகின்றன? இதில், தகவல் ஊடகங்கள், அரசாங்கத் தலைவர்கள் , மக்கள் பிரதிநிதிகள் , அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள், ஆசிரியர்கள், பெற்றோர் இவர்களின் பங்கு தான் என்ன?

அவ்வப் போது அரசாங்கம் அறிவிக்கும் திட்டங்கள் குறித்து மேல்குறிப்பிட்ட தரப்புகள் விழிப்பாக இருந்தால் இந்தக் கல்விக்கு விண்ணப்பிக்கும் முறை , எங்கே செல்வது ? என்ன செய்வது, என்னென்ன பத்திரங்கள் தேவை, காலக்கெடு ஆகியவை குறித்த விவரங்கள் நிச்சயம் இம்மாணவர்களை முறையாகச் சென்றடையும். அவர்களின் எதிர்காலமும் சிறக்கும்.

ஆக, நமது மாணவர்களைத் திரட்டி அவர்களுக்கு வழிகாட்டுவோம். ஒரு நாட்டின் முதுகெலும்பு, அந்நாட்டின் இளைஞர்கள் என்பதை நினைவிற் கொண்டு அவர்களை சிறந்தச் சமுதாய தலைவர்களாக்கும் களத்தில் குதிப்போம்.

நாட்டில் சுபிட்சத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவோம். வெற்றிகரமான-ஒற்றுமையான-கல்வி கற்ற சமூகம் என இந்திய சமுதாயத்தின் நற்தோற்றத்தை மேம்படுத்துவோம். கல்விக் கற்ற சமுதாயமாக இந்திய சமூகம் என்றும் விளங்க வேண்டும். அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். இரண்டும் நமது கைகளில் தான் உள்ளது. —தி மலேசியன் டைம்ஸ்