|Friday, February 24, 2017

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் அழைப்பு 

palanisamy

சென்னை, பிப்ரவரி 16 :   எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு உள்ளார்.

கவர்னர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்? பன்னீர்செல்வத்தையா? அல்லது எடப்பாடி பழனிச் சாமியையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கூவத்தூரில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. பகல் 12.30 மணிக்கு தன்னை வந்து சந்திக்கும்படி கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை அறிந்ததும் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடமும், அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களிடமும் உற்சாகம் கரை புரண் டோடியது.

Image result for எடப்பாடி பழனிச்சாமி

10.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் இருந்து கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் வந்தனர்.

12.30 மணிக்கு அவர்கள் 5 பேரும் கவர்னர் வித்யா சாகர்ராவை சந்தித்து பேசினார்கள். பதவி ஏற்பு விழா குறித்து கவர்னர், அவர்கள் 5 பேருடனும் விவாதித்தார்.

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு முறைப்படி விடுத்ததாக அ.தி.மு.க தகவல் தெரிவித்து உள்ளது.15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க கவர்னர் உத்த்ரவிட்டு உள்ளார்.  கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலை கவர்னரிடம் கொடுப்பார்கள். இதையடுத்து இன்று மாலையே பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

கவர்னர் மாளிகையில் மிக, மிக எளிமையாக பதவி ஏற்பு விழா நடத்தப்படும். முதல்-அமைச்சருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

எடப்பாடி பழனிச்சாமி யார்..?:

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் பழனிச்சாமி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, அவரின்நம்பிக்கைக்குரியவரான பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 14-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அந்த கடிதத்தை தற்போது ஏற்றுள்ள ஆளுநர் அவரை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்து, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.

Image result for எடப்பாடி பழனிச்சாமி

எப்போது தீரும் அரசியல் பரபரப்பு ? : மக்கள் குழப்பம்

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழக அரசியல் களம் படு விறுவிறுப்பாக உள்ளது. பன்னீரின் மெரினா பேட்டி, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பின் அவர்களை கூவத்தூரில் அடைத்து வைத்தது, பின்னர் சசி மற்றும் பன்னீர்செல்வத்தின் அனல் பறந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், ஆட்சியமைக்க உரிமை கோரிய சசிகலா, ஆளுநரின் மவுனம், ஆளுநரிடம் தொடர் ஆலோசனையில் இருந்த பன்னீர் தரப்பு,  பன்னீருக்கு பெருகிய அரசியல் ஆதரவு, சசியின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு, சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு,  பின் அவர் ஆட்சியமைக்க உரிமை கோரியது, தற்போது அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது என பரபரப்பான அரசியல் சூழல் தொடர்ந்து வருகிறது.

எனினும் பழனிச்சாமி பதவியேற்று 15 நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்குள்ளோ அல்லது நிரூபிக்கும் போதோ இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரும் என்பது அரசியல் விமர்சகர்களாலேயே கணித்து சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்துள்ளதாகவே காணப்படுகிறது. இதில் பார்வையாளர்களாக உள்ள மக்களின் மனநிலை மேலும் கடும் குழப்பங்களை சந்திக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.