|Thursday, February 23, 2017

ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை – மலாக்கா முதலமைச்சர் விளக்கம் 

datuk-idris-haron

ஆயேர் கெரோ, ஜனவரி 10: மலாக்கா மாநிலத்தின் சில அதிகாரிகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளில் மட்டுமே தாம் உதவியிருப்பதாக முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஹருன் கூறியுள்ளார். அவ்வாணையத்தின் விசாரணைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மலாக்கா பொதுச் சேவை துறை அதிகாரிகள் சிலருக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு மட்டுமே தாம் உதவியதாக அவர் குறிப்பிட்டார். மலாக்கா மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

எனினும், அந்த விசாரணை தம்மை உட்படுத்தியது அல்ல. மாறாக, மாநில அரசு அதிகாரிகள் சிலரை உட்படுத்தியது என அவர் விளக்கினார்.

மாநில முதலமைச்சர் எனும் அதிகாரத்துக்கு உட்பட்டே தாம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உதவியதாக இட்ரிஸ் தெரிவித்தார். மலாக்கா மாநில அரசு ஊழியர்களிடையே உயர் நெறி பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வித விசாரணைகளுக்கும் ஒத்துழைக்க தயார் எனவும் அவர் கூறினார்.

மாநில முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலருக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டதாக உள்நாட்டு நாளிதழ் ஒன்று வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.–தி மலேசியன் டைம்ஸ்