|Saturday, May 27, 2017

உடல் உறுப்புக்களை தானம் செய்வீர் – மலேசியர்களுக்கு வலியுறுத்து 

கோலாலம்பூர், மார்ச் 20: உடல் உறுப்புக்களை தானம் செய்ய அதிகமான மலேசியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதிகமானோர் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என சுகாதார துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹாயா வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் சுமார் 381 ஆயிரத்து 353 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிந்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், நாட்டில் தற்போது 31 ஆயிரத்து 84 பேர் சிறுநீரக தானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்போரில் அதிகமானோர் சிறுநீரக நோயாளிகள் ஆவர். மேலும் ஐந்து இருதய நோயாளிகளும் நுரையீரல் பாதிக்கப்பட்ட நால்வரும் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மலேசியர்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே இருப்பது வருத்தமளிப்பதாக ஹில்மி குறிப்பிட்டார். சிறுநீரகப் பிரச்சனையால் இதுவரை 400 ஆயிரம் மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரம் பேர் ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஹில்மி கூறினார்.

சிறுநிரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நிலைகளாக பிரிக்கப்படுகின்றனர். முதலாவதிலிருந்து நான்காவது நிலை வரையிலானவர்கள், சாதாரண சிகிச்சையைப் பெறுகின்றனர். அதே வேளை, ஐந்தாம் நிலை சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, 100 ஆயிரம் பேரில் 200 பேருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுவதாக ஹில்மி குறிப்பிட்டார். சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கு உடல் பருமன் பிரச்சனை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆக, உடல் பருமன் பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால், சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கக்கூடும் என ஹில்மி எச்சரித்தார்.-தி மலேசியன் டைம்ஸ்