25 dead, over one million affected by southern Thai floods
January 10, 2017
1MDB bangs Dr M over haj ‘lies’
January 10, 2017

தைப்பூசத் திருவிழா : ஆள் பாதி ஆடை பாதி

கோலாலம்பூர், ஜனவரி 10: தைப்பூசத் திருவிழா இந்துக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவாகும். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் பூச நட்சத்திரத்தன்று பெளர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

தங்களின் வேண்டுதலுக்கு பலன் அளித்து காத்த கருணையே வடிவமான கந்தனுக்கு நன்றி கூறும் வகையில் காவடி ஏந்துதல், பால்குடம் எடுத்தல், மொட்டை போடுதல் போன்ற காணிக்கைகளைத் தைப்பூசத்தன்று முருகன் பக்தர்கள் செலுத்துகின்றனர். தமிழகத்தை தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், ஸ்ரீ லங்கா போன்ற நாடுகளில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாகவும் வண்ணமயமாகவும் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான தைப்பூச கொண்டாட்டத்தில் எதிர்பார்ப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பது, ஆபாசமாக ஆடை அணிவோர் மீது சாயம் தெளிக்கும் செயல். இது நியாயமா? அநாகரீகமா?

mehg130814a09

ஆலயத்தில் ஆடைக் கட்டுப்பாடு என்பது ஒன்றும் புதிதல்ல. அரைகுறையாக ஆடை அணிந்து உள்ளே வரக் கூடாது என்பது பல கோவில்களில் அமலில் இருக்கும் விதிமுறையாகும். ஆனால் இப்போது நிலைமை என்ன? ஆண்கள் என்றால் வேட்டி சட்டை. பெண்கள் சேலை தாவணி அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு உடல் மூடும் வகையில் பொருத்தமான ஆடை அணிய வேண்டும். இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதும், இறைவனை அடையும் வழிகள் இவைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்குச் சொன்ன அரிய கருத்துக்கள்.

ஆடை தேவைதானா என்று நம் முன்னோர்கள் ஆன்மீகத்தில் சோதனை செய்து பார்த்ததை நாம் பல கோயில்களின் சிலைகள் மூலம் காண்கிறோம். இத்தகைய பின்னணியில் இருந்து வருபவர்கள் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உடை என்பது உடலின் பாதுகாப்புக்கும் நம் சுயமதிப்பைக் காப்பதற்குமான ஒன்று என எண்ணுகிறோம். இந்த சுதந்திர நாட்டில் நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்று என்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது.

அதற்காக, உடல் அங்க அசைவுகளை வெட்ட வெளிச்சமாக காட்டும் வகையில் ஆடை அணிவதும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். ஆடைகளிலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும். பார்ப்பவர்கள் கண்களைக் கூசச் செய்யும் வகையில் இருக்கக் கூடாது. ஆனால் இந்த விதிமுறைகள் பெண்களுக்கு மட்டும் தானா? பாரம்பரிய ஆடை அணிவது பெண்களுக்கும் மட்டும் கட்டாயமாக்கப்பட்ட சட்டமா? பாரம்பரிய ஆடைகளை ஆண்கள் அணியத் தவறினால் என்ன செய்வது? போன்ற கேள்விகள் தற்போது சமூக பிணைப்பு வலைத்தளங்களில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

Batu_Caves_28

வேட்டி உடுத்தியதால் என்னை ஒரு கேளிக்கை விடுதிக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறி அதற்காகப் பெரிய அளவில் எதிர்ப்பு சொன்னவ‌ர்கள் ஜீன்ஸ் அணிந்தால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத இளைஞர்களுக்கு என்ன நீதி தருவார்கள்? உடை என்பது மற்றவர்களுக்கு உறுத்தாமல் இருக்க வேண்டும். ஆபாசமாக இருக்கக் கூடாது என்பதெல்லாம் சரி.அது ஒரு சாராருக்கு சாதகமாகவும் மற்றவருக்கு பாதகமாகவும் இருப்பது நியாயமா?

ஆடை இல்லாத காட்டு மிராண்டிகளாய வாழ்ந்த மனிதனுக்கு ஆடைகள் ஏன்? எதற்காக அணிவிக்கப்பட்டது என்பதை மக்களுக்குப் போதிக்கத் தெரியாமல் ஆலயங்களுக்கு செல்லும் போது மட்டும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் இயற்றியுள்ளனர். மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிர் இனங்களும் ஆடைகள் அணிவதில்லை. மனிதர்களுக்கு மட்டும் ஆடைகள் அணிய அவசியம் வந்தது ஏன்?

மனிதர்கள் அணியும் ஆடைகளின் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை என்பது எதற்கு? மனிதனுக்கு மட்டுமே உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்துள்ளான். உயர்ந்த அறிவு ஏன் கொடுக்கப்பட்டது? மனிதனின் ஆன்மாவில் அருள் என்ற பொக்கிஷம் உள்ளது அதைத் தெரிந்து அவற்றை சுரக்க வைத்து அதை அனுபவித்து மரணத்தை வென்று இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக மனிதப் பிறப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது. 

 உணர்ச்சித் தரும் உறுப்புக்களை மறைப்பதற்காகவும், உணர்ச்சிகளை கட்டுப் படுத்தவும், உயிர்சக்தியானது வெளியே விரையமாகாமல் பாது காக்கவும் ஆடைகள் தேவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அந்த ஆடைகளின் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

str2_ccz_skymalaysia10

ஆலயங்களுக்கு போகும் போது மட்டும் ஆடைகளுக்கு கட்டுபாடும் என்றும் மற்ற காலங்களில் கட்டுபாடுகள் தேவை இல்லை என்பதும் சரியான சட்டம் இல்லை. உடம்பை மறைக்க புறத்தே ஆடைகள் அணிகின்றோம். மனத்தை கட்டுபடுத்த எந்த ஆடைகளை அணிவீர்கள். அதனைக் கட்டுபடுத்த ஒழுக்கம் மிகவும் முக்கியமானது ஆகும். ஒழுக்கம் என்றால் என்னவென்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

ஆடைகளை கட்டுபடுத்துவதுடன் மனத்தைக் கட்டுபடுத்த தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கையில் வளம் பெறுவீர்கள்.–தி மலேசியன் டைம்ஸ்

Comments are closed.